
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2-ம் தேதி அமெரிக்க பொருள்களுக்கு பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை விதிப்பதாக அறிவித்தார். அதன்படி இந்திய பொருள்கள் மீது 26 சதவீதமும், சீனாவின் இறக்குமதி பொருள்களுக்கு 34 சதவீதமும், வியட்னாமுக்கு 46 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று டிரம்பதிவு அறிவித்தார். இதற்கு எதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
சீனா வரி விதிப்புக்கு எதிராக அமெரிக்க பொருள்களுக்கு 34 சதவீதம் கூடுதல் வரி விதித்தது. இதனால் உலக பங்குச் சந்தைகளில் கடுமையான சரிவு ஏற்பட தொடங்கியுள்ளது. கடந்த வியாழக்கிழமை மட்டும் எலான் மஸ்க் போன்ற உலக பணக்காரர்கள் 500 பேர், ஒட்டுமொத்தமாக 28 பில்லியன் டாலர்களை இழந்தனர். இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று உலகப் பங்குச்சந்ததிகளில் கடும் தாக்கம் இருந்து வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்று பங்குச் சந்தை சரிவு கடுமையாக உள்ளதாக செய்திகள் வருகின்றது.
சிங்கப்பூரின் பங்குச்சந்தைகள் இன்று 7 சதவீதத்திற்கும் மேலாக சரிந்தன. ஆசியா முழுவதும் சந்தைகள் சரிவைச் சந்தித்ததால் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு 281.84 புள்ளிகள் சரிந்து 3544.02 ஆக உள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீடு எண் சென்செக்ஸ் இன்றைய நாளின் தொடக்கத்திலேயே 3000 புள்ளிகள் வரை சரிவு. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சி அடைந்த நிலையில் பங்குச்சந்தையும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்நிலையில் புளோரிடாவில் WEEKEND முடித்து வாஷிங்டனுக்கு ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பிய போது செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் கூறியதாவது, சில நேரங்களில் ஏதாவது சரி செய்ய மருந்து எடுத்துக் கொள்ள வேண்டியதிருக்கும் என்று தெரிவித்தார். மேலும் வர்த்தக பங்காளிகள் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக உள்ளனர் என்று கூறினார்.
இந்நிலையில் தனது சொந்த சமூக ஊடகங்களில் பதிவிட்ட அவர், சீனா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகளுடன் நமக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை உள்ளது. இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு வரி விதிப்பு மட்டுமே. இவை இப்போது அமெரிக்காவுக்கு பல பில்லியன் டாலர்களை கொண்டு வருகிறது. அவை ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. அமெரிக்காவிற்கான வரி விதிப்புகள் மிகவும் அழகான விஷயம் என்பதை ஒருநாள் மக்கள் உணர்வார்கள் என்று தெரிவித்தார்.