
அமெரிக்காவில் ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் பதவியேற்றதிலிருந்து ஒட்டுமொத்த பொருளாதார வர்த்தகத்திற்கும் புதிய வரி விதிப்புகளை அறிவித்துள்ளார். அதன்படி எஃகு, அலுமினியம் மற்றும் கார்கள் மீது வரி விதிப்பு உட்பட பல்வேறு தொழில்கள் மற்றும் வர்த்தக கூட்டாளிகளுக்கிடையே வரிகளை அதிகரித்தது.
இதனை சர்வதேச வர்த்தகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்காக எடுக்கப்படும் தேவையான நடவடிக்கைகள் என ட்ரம்ப் நியாயப்படுத்தி வருகிறார். இதுபோன்று கடந்த திங்கள்கிழமை தக்காளி இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள பொருள் குவிப்பு எதிர்ப்பு வரியை தொடர்ந்து கடைபிடித்து வந்த மெக்சிகோ உடனான 2019 ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதாக அமெரிக்கா அறிவித்தது.
இந்த நடைமுறை அமெரிக்க விவசாயிகளை பாதுகாக்க வணிகத்துறை முயற்சிப்பதால், வரும் ஜூலை 14 அன்று பெரும்பாலான மெக்ஸிகன் தக்காளி இறக்குமதிகளுக்கு இந்த நடவடிக்கை கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து வணிகத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்ததாவது, ” இந்த ஒப்பந்தம் குறைந்த விலையில் வரும் மெக்ஸிகன் தக்காளி இறக்குமதியிலிருந்து அமெரிக்க விவசாயிகளை பாதுகாக்க தவறிவிட்டது”என தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பெரும்பாலான மெக்ஸிகோ தக்காளி இறக்குமதிகளுக்கு 20.9% ஆன்ட்டி- டப்பிங் வரி விதிக்கப்படும். ஆனால் தற்போது இறக்குமதி செய்யப்படும் தக்காளிகளில் பெரும்பாலான பகுதியை மெக்ஸிகோ வழங்கி வருவதால் இந்த நடவடிக்கை நுகர்வோர் விலையில் அதிகரிப்பு மற்றும் விநியோக செயலில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புது வர்த்தக நடவடிக்கை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தலைமையிலான தற்போதைய நிர்வாகத்தின் மொத்த வர்த்தக நோக்குடன் ஒத்துப் போகின்றது. இந்த நடவடிக்கையால் அமெரிக்க தக்காளி உற்பத்தியாளர்கள் சந்தையில் நேர்மையான போட்டிகளை எதிர்கொள்ள முடியும் எனவும் வர்த்தகத் துறை தெரிவித்துள்ளது.