
சேலம் மாவட்டம் சின்ன திருப்பதி அம்மன் நகர் என்னும் பகுதியில் சார்ஜ் போட சென்ற பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சின்ன திருப்பதி அம்மன் நகர் என்னும் பகுதியில் கெளதம்-ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று காலைப் பொழுதில் ராதா தன்னுடைய செல்போனில் சார்ஜ் இல்லாததை அறிந்து சார்ஜ் போடுவதற்காக சென்றார். அப்போது செல்போனை எடுத்துக் கொண்டு சார்ஜ் போட முயன்ற நிலையில் திடீரென அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் ராதா சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராதாவின் கணவர் மற்றும் அவருடைய அப்பா ராதாவை சேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் ராதாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இதைத் தொடர்ந்து செல்போன் சார்ஜ் வயர் சேதமாகி மின்சாரம் தாக்கியதால் ராதா உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதாவது வயர் மூலம் மின்சாரம் தாக்கியதால் ராதா உயிரிழந்தாரா? என்பது குறித்து கள்ளக்குறிச்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த பெண்ணுக்கு நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.