அமெரிக்காவின் புளோரிடா பகுதியைச் சேர்ந்த 23 வயதான அலெக்சிஸ் லோரன்ஸ், கலிபோர்னியாவின் ஆரஞ்ச் பகுதியில் உள்ள மருத்துவ மையம் ஒன்றில் டெட்டனஸ், நிமோகாக்கல் மற்றும் மூளைக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளைப் பெற்றார். ஆனால், அந்த தடுப்பூசிகளைப் பெற்ற பத்து நிமிடங்களிலேயே அவர் பார்வை இழப்பு, வாய் அசைவின்மை, வாந்தி போன்ற பல ஆபத்தான அறிகுறிகளை எதிர்கொண்டார். உடனே அவசரமாக அவரை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

அங்கு நிதி திரட்டுதலின் மூலம் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அவருக்கு ரத்தக் கோளாறும் ஏற்பட்டதால் ரத்த மாற்றச் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சையின்பிறகு குறைந்த அளவிலான நிவாரணம் கிடைத்தாலும், லோரன்ஸ் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. தொடர்ச்சியான சிகிச்சை தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அலெக்சிஸ் லோரன்ஸ் தனது நிலை குறித்து டிக்டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவுகளைப் பகிர்ந்து வருகிறார். இதில், அவரது வீக்கத்தால் பாதிக்கப்பட்ட கண்கள் மற்றும் முகம் காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமைக்கு மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பு எனக் கூறும் அவரது குடும்பத்தினர், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.