சென்னையில் உள்ள பல்லாவரத்தில் திமுக அரசின் இரண்டு வருட சாதனை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 10 வருடங்களாக பாழ்பட்டு கிடந்த தமிழகத்தை விடியல் ஆட்சி தற்போது மீட்டு விட்டது. அனைத்து மக்களையும் கவர்ந்த மகத்தான ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி. அனைவரையும் அரவணைத்து செல்வது தான் திராவிடம். அதற்குப் பிரிக்க தெரியாது. ஆளுநருக்கு நான் சொல்கிறேன். திராவிடம் என்பது காலாவதியான கொள்கை அல்ல.

சனாதனம் மற்றும் சாதியின் பெயரால் இழிவு படுத்தி பிரித்தல், பெண் என்பதால் புறக்கணிப்பது போன்றவற்றையெல்லாம் காலாவதியாக்கியதுதான் திராவிட மாடல். ஆரிய படையெடுப்புகளை வீழ்த்தும் ஒரே ஆயுதம் திராவிட மாடல் என்பதால் தான் ஆளுநர் அதை பார்த்து பயப்படுகிறார். தமிழ்நாட்டில் அமைதி சூழ்நிலை நிலவ கூடாது என்ற நோக்கத்திற்காக ஆளுநர் அனுப்பி வைக்கப்பட்டாரா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆளுநரும் எதிர்க்கட்சித் தலைவர் போன்றே பேசி வருகிறார். மேலும் தனிப்பட்ட நட்புக்காக நான் கொள்கையை எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டேன் எனக் கூறியுள்ளார்.