
பீகாரில் குரூப் ஏ மற்றும் பி பதவிகளுக்கான BPSC முதன்மைத் போட்டித் தேர்வுகள் டிசம்பர் மாதம் 13ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 5 லட்சம் பேர் எழுதினர். பீகார் மாநிலத்தில் 945 மையங்களில் இந்த ஒருங்கிணைந்த முதன்மை போட்டி தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வின் வினாத்தாள்கள் கசிவு, வினா தாள்கள் கொடுப்பதில் காலதாமதம் போன்ற குற்றங்களை மாணவர்கள் முன்வைத்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் ஒருவரை மாஜிஸ்திரேட் தாக்கிய சம்பவம் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. தேர்வு எழுத வந்த மாணவர்கள் வினாத்தாள்களை கிழித்து தேர்வறையில் ரகளையில் ஈடுபட்ட வீடியோவும் வெளியாகி வைரலாகியது. இந்த நிலையில் தேர்வுகளை மீண்டும் நடத்த கோரி திரளான மாணவர்கள் பீகார் மாநிலத்தின் தலைநகரான பாட்னாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாத் கிஷோர் கட்சியினர் மற்றும் போட்டித் தேர்வு பயிற்சி மையத்தார் ஆகியோர் மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை காவல்துறையினர் தடியடி நடத்தியும், தண்ணீரை பீச்சி அடித்தும் கலவரக்காரர்களை கலைக்க முயன்றனர். இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது, ஜன் சுராஜ் கட்சி எந்த அனுமதியும் வாங்காமல் பாட்னாவில் காந்தி மைதானத்தில் மக்களை தூண்டி விட்டு சட்ட ஒழுங்கு சீர்குலைப்பை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். போராட்டம் வன்முறையாக மாறி காவல் துறைகளின் ஒலிபெருக்கிகளை உடைத்து காவல்துறை அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து நிர்வாகம் பலமுறை எச்சரித்தும் அதனை மீறி பொது அமைதியை சீர்குலைத்துள்ளனர் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.