கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மறுவாழ்வு மையத்தில் நடந்த கொடூர சம்பவம் தற்போது வெளிவந்து சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெலமங்கலா ரூரல் போலீஸ் எல்லைக்குள் உள்ள இந்த ரீஹாப் மையத்தில், ஒரு நோயாளி வார்டனின் உடைகளை துவைக்கவும், கழிவறையை சுத்தம் செய்யவும் மறுத்ததற்காக 30 தடவைவிற்கு மேல் கம்பியால் அடிக்கப்பட்டுள்ளார். சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதுடன், அதற்கான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.

வீடியோவில் அந்த நபர் பலமுறை இழுக்கப்பட்டு, வேறொரு நபர் கம்பியால் அடிக்க, அறையில் மூன்று பேர் இருப்பது காணப்படுகிறது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து, குற்றவாளிகளுக்கு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

“பலவீனமான நிலையில் உள்ள நோயாளிகளை இவ்வாறு கொடூரமாக நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது,” எனக் கூறி பலர் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ரீஹாப் மையத்தில் சோதனை நடத்தியுள்ளனர். மையத்தின் உரிமையாளர் மற்றும் வார்டனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.