
தெலங்கானாவின் பத்ராத்ரி கொதாகுடெம் மாவட்டத்தில், சத்தீஸ்கரைச் சேர்ந்த 86 மாவோயிஸ்டுகள் இன்று போலீசாரிடம் சரணடைந்தனர். தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பில் செயல்பட்டு வந்த பகுதி உறுப்பினர்கள் உள்ளிட்ட இவர்கள், காவல் துறை உயர் அதிகாரி சந்திரசேகர் ரெட்டியின் முன்னிலையில் சரணடைந்தனர்.
அரசின் நலத்திட்டங்கள் மற்றும் பழங்குடியினருக்கான உதவித் திட்டங்களை அறிந்ததன் பின், கிளர்ச்சியைக் கைவிட்டு அமைதி வாழ்வைத் தேடி வந்துள்ளனர் என போலீசார் தெரிவித்துள்ளனர். சரணடைந்த 86 பேரில், 4 பேர் மீது தலா ரூ.4 லட்சம் வரை வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனுடன், 2024ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 224 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தங்களது கொள்கைகள் இனி செயல்படமுடியாது என்பதையும், கிளர்ச்சி வழியில் எதிர்காலம் இல்லை என்பதையும் உணர்ந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.
இதற்கு முன்னர் ராம்பூர் கிராமத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஒரு பழங்குடியின பெண் உயிரிழந்ததும், மற்றொரு பெண்ணின் கால் முற்றிலும் சிதைந்ததும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.