
கடலூர் மாவட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர், பண்ருட்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ வேல்முருகன் திமுக அரசை கூட்டணி கட்சியினர் என்று கூட பாராமல் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, சமீபத்தில் பெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் பெருமளவு பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். தேர்தல் நேரங்களில் மட்டும் கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய துணை முதலமைச்சர் வந்த போதும் அந்தத் தொகுதி எம்.எல்,ஏவுக்கு தகவல் கொடுக்கவில்லை.
அமைச்சர்கள் எங்களிடம் பேசுவதை கௌரவ குறைச்சலாக நினைக்கிறார்களா?. தேர்தலின் போது மட்டுமே அமைச்சர்கள் நேரடியாக எங்களை தொடர்பு கொள்வார்கள். மற்ற நேரங்களில் அவரது உதவியாளர்கள் மூலமே பேச முடிகிறது. மழை வெள்ள பாதிப்புகள் குறித்து நிவாரணங்கள் அளிப்பதில் பல்வேறு பாரபட்சங்கள் நடைபெறுகிறது. தமிழகத்தில் பேரிடர் வரும் போதெல்லாம் கடலூர் பாதிக்கப்படுகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவதில் கூட பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன என்று ஆதங்கத்துடன் வேல்முருகன் கூறினார்.