உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள தேதார் கிராமத்தை சேர்ந்த விவசாயி தீப் சந்திர யாதவ், தனது மகன் அபிஷேக்கின் திருமணத்தை நினைவில் நிற்கும் வகையில் நடத்த முடிவு செய்தார். குடும்பம் மற்றும் கிராமத்தின் கனவாக இருந்த “ஹெலிகாப்டரில் மருமகளை அழைத்துச் செல்வது” என்ற எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், தனது பயிர் விளைச்சலை ரூ.50 லட்சத்துக்கு விற்று, அந்த வருவாயில் ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்தார்.

இந்த அரிய சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. அபிஷேக் – ஜோதியின் திருமணம் கஜுராஹோவில் உள்ள ஓர் ஹோட்டலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதன்பின் திங்களன்று மருமகள் ஜோதி, ஹெலிகாப்டரில் தனது மாமியார் வீட்டிற்கு வந்தார். ஹெலிகாப்டர் கிராமத்தின் மீது பறந்ததும், நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் அதனை நேரில் காண குவிந்தனர்.

வயலின் நடுவில் ஹெலிகாப்டர் தரையிறங்கியதும், மருமகளை வரவேற்கும் பாரம்பரிய சடங்குகள் கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஏற்பாட்டை பற்றிக் கூறும் மகன் அபிஷேக், “இந்த முயற்சி என் தாத்தாவின் கனவு. அந்த கனவினை நிறைவேற்ற விருப்பப்பட்ட என் தந்தை, இந்த திருமணத்தில் அதை செயல்படுத்தினார்” என்றார். மருமகள் ஜோதி கூறுகையில், “ஒரு பெண் இந்த அளவிற்கு மரியாதையுடன் ஹெலிகாப்டரில் மாமியார் வீடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்பது எனக்கே கனவாகவே இருந்தது” என்றார்.

விவசாயத்தில் கிடைத்த நல்ல லாபத்தினால், முழு குடும்பம் மற்றும் கிராம மக்களும் பெருமையுடன் இந்த நிகழ்வை கொண்டாடினர். இது தேதார் கிராமத்தில் ஒரு வரலாற்றுச் சம்பவமாக பதிவாகியுள்ளது.