
கர்நாடக மாநிலம் குஷால் பகுதியில் சுரேஷ் – மல்லிகா தம்பதி வாழ்ந்து வந்தனர். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கடந்த 2020 ஆம் ஆண்டு மல்லிகா திடீரென காணாமல் போய் உள்ளார் அவரை பல இடங்களில் தேடிய சுரேஷ் தனது மனைவியை கண்டுபிடிக்க முடியாததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 7 மாதங்கள் கழித்து ஒரு எலும்புகூடை காட்டி ‘அது மல்லிகாவா’ என்று அடையாளம் காட்டுமாறு கேட்டனர். அதற்கு சுரேஷ் மனைவியின் காலனி பக்கத்தில் இருந்ததால் அது தன் மனைவி தான் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து சுரேஷ் தான் அவரது மனைவியை கொலை செய்து விட்டதாக சந்தேகப்பட்ட காவல்துறையினர் அவரை கைது சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் டிஎன்ஏ பரிசோதனையில் அந்த எலும்புக்கூடு மல்லிகாவுடையது இல்லை என்பது தெரிய வந்ததால் சுரேஷ் ஜாமினில் விடப்பட்டார்.
இந்நிலையில் தற்போது 5 ஆண்டுகளுக்குப் பிறகு குசேரி என்ற பகுதியில் மல்லிகா ஒரு நபருடன் நின்று தேநீர் அருந்துவதை கண்டு சுரேஷ் அதிர்ச்சியடைந்தார். இதுக்குறித்து சுரேஷ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க விரைந்து வந்த போலீசார் மல்லிகாவை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மல்லிகா 5 ஆண்டுகளாக தனது காதலனுடன் வாழ்ந்து வந்தது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து மல்லிகாவை மகளிர் இல்லத்திற்கு அனுப்பி வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டதாக கூறிய மல்லிகா உயிருடன் வந்ததையடுத்து கொலை செய்யப்பட்டது யார் என்பது குறித்த விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் எந்த தவறும் செய்யாத சுரேஷ் தனது மனைவியை கொலை செய்து விட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது அப்பகுதியில் பேசு பொருளாகியுள்ளது.