
கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் 31வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அங்கு 6635 மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக துணைவேந்தர் சாந்திஸ்ரீ துளிப்புடி பண்டிட் கலந்து கொண்டார். அதோடு அன்னை தெரசா பல்கலைக்கழகத் துணைவேந்தர், பதிவாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக கொடைக்கானல் வந்த தமிழக கவர்னர் அங்குள்ள சங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்து மாணவிகளுக்கு கலந்துரையாடினார். தமிழ்தாய் வாழ்த்து உடன் தொடங்கிய நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ராஜகோபால் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் சந்திரமௌலி கவர்னருக்கு பொன்னாடை அணிவித்தார். அதனை தொடர்ந்து பொறுப்பாளர் ராமசுப்பிரமணியம் கவர்னர் நினைவு பரிசு வழங்கினார். அப்போது கவர்னர் பேசியதாவது, தோல்வியை கண்டு துவங்காமலும், பின்வாங்கி செல்லாமலும், தோல்விக்கான காரணங்களை குறித்து ஆராய்ந்து அதையே வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றினால் சாதனையாளர்களாக மாற முடியும்.
வெற்றிக்கு முதல் காரணமாக மாணவர்கள் கடின உழைப்பு, தன்னம்பிக்கை, வெற்றியை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். எனது வெற்றிக்கு காரணம் என் தாய் தான், எனவே மாணவர்கள் தான் படிக்கும் காலத்திலும், அதன் பிறகும் பெற்றோர்களின் அறிவுரையை பின்பற்ற வேண்டும். உங்களுடைய இலக்கு பெரிதானதாக இருந்தால், உங்களுடைய பள்ளிக்கும், பெற்றோருக்கும், சமுதாயத்திற்கும் பெருமை தேடி தரும். இவ்வாறு அவர் கூறினார். மேலும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி எழுதிய எக்சாம் வாரியர்ஸ் என்ற புத்தகத்தையும் பரிசாக வழங்கினார்.