உலகின் மிக உயரமான கட்டடமான துபாயின் புர்ஜ் கலீஃபா, பிரமாண்டமான ஆடம்பர கட்டிடத்தின்  அடையாளமாக திகழ்கிறது. இங்கு ஒரு படுக்கை அறை கொண்ட அபார்ட்மெண்ட் மாதம் ரூ.42 லட்சத்திற்கு மேல் வாடகை செலுத்த வேண்டிய நிலையில் பலரும் இக்கட்டடத்தில் ஒரே ஒரு வீடு வாங்கவே கனவு காண்கின்றனர். ஆனால், இந்திய வம்சாவளியை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் வி நேரம்பர்ம்பிலின், இக்கட்டடத்தில் 22 சொகுசு அபார்ட்மெண்ட்கள் வாங்கி வைத்துள்ளார். இதனால் அவர்  ‘புர்ஜ் கலீஃபாவின் ராஜா’ என புகழப்படுகிறார்.

இவர் கேரளாவில் உள்ள ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். இவர் தனது சிறுவயது முதலே தனது தந்தையுடன் வேளாண் பொருள்கள் வர்த்தகத்தில் உதவியதோடு பஞ்சு விதைகளில் இருந்து எஞ்சிய சளசரிகையை எடுத்து விற்பனை செய்து வருமானம் ஈட்டி வந்தார். இதைத்தொடர்ந்து ஷார்ஜாவிற்கு வேலைவாய்ப்பு தேடி சென்றவர், அங்கு வளிமண்டல சூட்டின் காரணமாக ஏர் கண்டிஷனிங் தொழில் செய்தால் பெரும் லாபம் இருப்பதை உணர்ந்து அதில் தொழில் தொடங்கி வெற்றியும் பெற்றுள்ளார்.

ஆரம்ப காலத்தில் சிறிய நிறுவனத்தை தொடங்கிய அவர் தற்போது GEO (group of companies) என்ற பெயரில் மத்திய கிழக்கு நாடுகளில் மிக முக்கிய தொழிலதிபராக திகழ்கிறார். இந்நிலையில் ஒரு முறை அவரது உறவினர் ஒருவர் புர்ஜ்  காலீஃபா கட்டிடத்திற்குள் உனக்கு நுழைய கூட வாய்ப்பு கிடைக்காது என சவால் செய்ததிலிருந்து தொடங்கி ஆரம்ப காலத்தில் ஒரு அப்பார்ட்மெண்ட் வாடகைக்கு எடுத்த ஜார்ஜ் தற்போது புர்ஜ் காலீஃபாவில் உள்ள 22 சொகுசு வீடுகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்.

இவரது சொத்து மதிப்பு ஏறத்தாழ ரூபாய் 4800 கோடிக்கு மேல் உள்ளது. மேலும் புர்ஜ் காலீஃபாவில் அதிக வீடுகள் வைத்திருக்கும் இந்தியர்களில் ஒருவராகவும் உள்ளார். அவருடைய வீடுகள் தங்கத்தால் பூசப்பட்ட சுவர்கள் அலங்கரிக்கப்பட்ட தரைகள் என மிகப் பிரம்மாண்டமாக உள்ளதாக கூறப்படுகிறது.