GPT-4o போன்ற மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு சாதனங்களை பயன்படுத்தி உண்மையைப் போலவே தோன்றும் ரசீதுகளை உருவாக்க முடியும் என ஒரு நபர் X தளத்தில் பகிர்ந்த பதிவால் இணையத்தில் பெரும் கவனம் திரும்பியுள்ளது. அவர் வெளியிட்ட புகைப்படத்தில், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ‘Epic Steakhouse’ என்ற உணவகத்திலிருந்து வாங்கியதாக காட்டப்படும் $277.02 மதிப்புடைய உணவுப் பட்டியல் உள்ளது.

ரசீதின் மீது சுருக்கங்கள், அச்சு வகை, மர மேசை பின்னணி என எல்லாம் உண்மை ரசீதைப் போலவே இருப்பதால், இது உண்மைதான் என நம்பவைக்கும் அளவிற்கு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பதிவுக்கு பலவிதமான கருத்துகள் கிடைத்துள்ளன. மேலும், ஐரோப்பாவில் எல்லா ரசீதுகளிலும் வரித் துறையின் இணையதளத்துடன் இணைக்கப்படும் QR குறியீடு இருப்பதை சுட்டிக்காட்டி, “இங்கே இது சாத்தியமில்லை” என்று சிலர் பகிர்ந்துள்ளனர்.

 

வல்லுநர்கள், “இதுபோன்ற போலி ஆதாரங்களை நிறுவனங்களுக்கு எதிராக பயன்படுத்தும் போது பெரிய பிரச்சனைகளுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது” என எச்சரிக்கின்றனர். AI தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் உண்மை-பொய்மைகளின் இடைவெளி நாளடைவில் மோசமாகும் அபாயம் நிலவுகிறது.