அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோவில் சுமார் 45 அடி உயரம் கொண்ட நிர்வாண பெண்ணின் சிலை திறக்கப்பட உள்ளது.  ஆர். எவல்யூஷன் என்று அழைக்கப்படும் இந்த படைப்பு பெண்களின் அதிகாரம் மற்றும் வலிமையை குறிப்பதாக கூறப்படுகிறது. அந்த சிலை சான்பிரான்சிஸ்கோவில் பெர்ரி கட்டிடத்தின் முன் 6 மாதங்கள் வைக்கப்படும்.

இதனை வடிவமைத்தவர் மார்க்கோ கோக்ரேன் என்ற கலைஞர் ஆவார். இந்த நிர்வாண பெண் சிலை உருவம் அமைப்பு பெண்களும் சுதந்திரமாகவும், பயமின்றியும் நடக்கக்கூடிய ஒரு உலகிற்கான அழைப்பு என இதனை வடிவமைத்த கலைஞர் தெரிவித்துள்ளார். இந்த சிலை இதற்கு முன் லாஸ் வேகாஸ் பெட்டுலுமா மற்றும் ஃபர்னிமேன் விழாவிலும் இடம்பெற்றுள்ளது.

இந்த சிற்பம் ஒரு நாளைக்கு 1 மணி நேரம் சுவாசிப்பது போலவும், இரவில் ஒளிருவது போலவும் தோன்றும். மேலும் இந்த சிலை சுமார் 32 ஆயிரம் பவுண்டுகள் எடை உள்ளது என கூறப்படுகிறது. இதனை இணைக்க சுமார் 55 ஆயிரம் வெல்டுகளால் இணைக்கப்பட்ட புவிசார் முக்கோண அமைப்பில் எஃகு கம்பி மற்றும் குழாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த சிலை திறப்பு விழாவில் தனித்துவமான கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.