அமெரிக்காவிற்கு 17 நாட்கள் அரசு முறை பயணமாக முதல்வர் ஸ்டாலின் சென்று இருந்த நிலையில் இன்று சென்னை திரும்பினார். அங்கு சுமார் 18 நிறுவனங்களுடன் 7618 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாமக நிறுவனர் ராமதாஸ் முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்து விட்டதாக விமர்சித்திருந்தார். இதேபோன்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதற்கு தற்போது முதல்வர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, அமெரிக்காவில் 18 நிறுவனங்களுடன் 7618 கோடி முதலீடுகள் கிடைத்துள்ளது. இதன் மூலம் 11,500 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் அதிமுக ஆட்சிக்காலத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு சென்ற நிலையில் 10% கூட முதலீடு கையெழுத்தாகவில்லை. அதற்கான ஆதாரங்கள் கூட என்னிடம் இருக்கிறது. இதை வெளியில் சொன்னால் அவருக்குத்தான் அவமானமாக இருக்கும். எனவே வெளிநாடு பயணங்கள் குறித்து நாங்கள் வெளியிட்ட அறிக்கையை அவர் படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என்று கூறினார்.