
மும்பையில் உள்ள காவல்துறையினருக்கு புகார் ஒன்று வந்துள்ளது. அந்த புகாரில் 48 வயதான பெண் ஒருவர் தனது கணவன் இறந்து விட்டதால், மகளின் திருமணத்திற்கு பிறகு, தனியாக வசித்து வந்துள்ளார். அதன் பின் மகளின் ஆலோசனைப்படி, திருமணத்தளத்தில் திருமணத்திற்காக பதிவு செய்துள்ளார். இந்த தளத்தில் பிரமோத் நாயக்(51) என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் கோவிட் 19 காலத்தில் இறந்துவிட்டதாக பொய்யாகக் கூறி, அந்த பெண்ணிடம் நெருக்கமாக பழகி, தொடர்பில் இருந்துள்ளார். இதையடுத்து கடந்த 2024 டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அதன் பின் கடந்த ஜனவரி மாதம் 2025ல் பிரமோத், அப்பெண்ணின் தங்க நகைகளை எல்லாம் திருடி சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல் துறையினர் தனிக்குழு அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில் பிரமோத் புனேவில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அதன் பின் நடத்திய விசாரணையில், திருடிய நகைகளை விற்க புனே சென்றதாக கூறினார். உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து, திருடிய ரூ.16 லட்சம் மதிப்புள்ள நகைகளை மீட்டு, பிரமோத்தை கைது செய்து மும்பைக்கு அழைத்து வந்தனர். மேலும் நடத்திய விசாரணையில் பிரமோத் கடந்த 3 ஆண்டுகளாக தனது மனைவி விட்டு பிரிந்து இருந்துள்ளார் என்றும், திருமணம் செய்துக்கொள்ள இருந்ததாகவும், அவர் விதவைகள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களை குறி வைத்து திருமணத்தளத்தில் கணக்கை உருவாக்கியதாகவும் தெரியவந்தது. அவர் குறைந்தது 3 முதல் 4 பெண்களிடம் இதே போன்று மோசடி செய்துள்ளார். மேலும் பிரமோத்தின் மோசடிகள் முழுமையாக வெளிச்சத்துக்கு வரும் வரை அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.