1989ஆம் ஆண்டு தனது மனைவியை கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டிவாரி என்பவர், 2005ஆம் ஆண்டு பரோலில் வெளியே வந்த பிறகு, சிறைக்கு திரும்பாமல் தலைமறைவாக இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றம் நவம்பர் 21, 2005 அன்று இரண்டு வாரங்களுக்கு பரோல் வழங்கியிருந்த நிலையில், அவர் தலைமறைவாகிவிட்டு, 20 ஆண்டுகளாக போலீசாரை ஏமாற்றிய விதம் வெளியாகியுள்ளது.

தற்போது 2025 ஏப்ரல் 12ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் உள்ள சூர்ஹட் என்ற கிராமத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரைம் பிராஞ்ச் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், டிவாரி பிரயாக்ராஜ் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் வசிப்பதாகக் கசிந்த தகவலையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

சூர்ஹட் பகுதியில் நடத்திய ரெய்ட்டின் போது, டிவாரி கைது செய்யப்பட்டார். விசாரணையில், தன்னை அடையாளம் தெரியாமல் வைக்க செல்போன் பயன்படுத்துவது இல்லை என்றும், அடிக்கடி வேலை மற்றும் இடங்களை மாற்றி வந்ததாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார்.

தலைமறைவாக இருந்த 20 ஆண்டுகளில், டிவாரி ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கி, மறுமணம் செய்து 4 குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். அவரது கடந்த கால குற்றங்களை வெளிக்கொள்ளாமல், எந்தவொரு அரசியல், சமூக தொடர்புகளும் இல்லாமல் வாழ்ந்து வந்துள்ளார்.

1987ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தின் ஓர்டனன்ஸ் கோர்ப்ஸில் டிரைவராக பணியாற்றியிருந்த டிவாரி, கொலை வழக்கில் தண்டனை பெற்றதையடுத்து இராணுவ பணியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது அவரது கைது குறித்து டெல்லி போலீசார் அதிகாரிகளை அறிவித்து, மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.