ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள எட்டி வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல். இவர் அந்த கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கி எட்டி வயல் கிராமம் வழியாக ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் பொருத்தப்பட்டிருந்த பிரேக் ஷூ என்ற இரும்பு கம்பி எதிர்பாராத விதமாக கழண்டு உள்ளது. ரயில் வேகமாக சென்றதால் இந்த இரும்பு கம்பி மிக வேகமாக பறந்து அருகே வயலில் வேலை செய்து கொண்டிருந்த சண்முகவேலின் தலையில் தாக்கி உள்ளது.

இதனால் பலத்த காயம் அடைந்த சண்முகவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று சண்முகவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயிலின் பிரேக் ஷூ தாக்கி விவசாயி இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.