
“புஷ்பா 2″திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் காட்சியானது ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இரவு 10:30 மணிக்கு திரையிடப்பட்டது. படத்தின் முதல் காட்சி என்பதால் ரசிகர்கள் கூட்டம் திரண்டு இருந்தது. இந்த நிலையில் படத்தை பார்க்க நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா ஆகியோர் தியேட்டருக்கு வந்தனர். அப்போது நடிகர், நடிகைகளை காண ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு சென்றனர். இந்த நிலையில் படம் பார்க்க வந்த ரேவதி (35)என்ற பெண் மற்றும் அவரது மகன் ஸ்ரீதேஜா(9) ஆகிய இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கி உள்ளனர். உடனே அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி ரேவதி உயிரிழந்துள்ளார். மேலும் அவரது மகன் ஸ்ரீதேஜா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் நடிகர் அல்லு அர்ஜுன் விடுவிக்கப்பட்டார். இதனை அடுத்து அல்லு அர்ஜுன் தரப்பில் ரேவதியின் குடும்பத்தினருக்கு ரூபாய் 25 லட்சம் நிவாரணம் வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுவனை விரைவில் சந்திக்க உள்ளதாகவும் பதிவு ஒன்றை நடிகர் அல்லு அர்ஜுன் வெளியிட்டு இருந்தார். இதனை அடுத்து “புஷ்பா2” பட தயாரிப்பாளர் ரேவதியின் குடும்பத்தினருக்கு ரூபாய் 50 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.