தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் வசித்து வருபவர் 34 வயதான பெண். இவரது கணவர் சென்னையில் பணியாற்றுகிறார். இந்த நிலையில் அந்த இளம் பெண் தனது குழந்தைகளுடன் சென்னையில் உள்ள தனது கணவரை சந்தித்து விட்டு நேற்று முன் தினம் இரவு சென்னை தாம்பரத்தில் உள்ள ரயில் நிலையத்தில் உழவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனது தாய் மற்றும் குழந்தைகளுடன் பயணித்துள்ளார்.

ரயிலில் அவர்களுக்கு மேல்படுக்கை கொண்ட டிக்கெட்டுகள் கிடைத்திருப்பதால் அந்தப் பெண் கீழ்படுக்கையை மாற்றித் தருமாறு ரயிலில் டிக்கெட்பரிசோதகர் தாமஸ் வெல்லஸியிடம் கேட்டுள்ளார். அதன்படி டிக்கெட் பரிசோதகர் கீழ்படுக்கையை மாற்றி கொடுத்துள்ளார். இதனை அடுத்து இரவு நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக டிக்கெட் பரிசோதகர் தாமஸ் தொல்லை செய்துள்ளார்.

இதனால் அந்தப் பெண் கத்தி கூச்சலிட்டு அருகில் உள்ளோரிடம் உதவி கேட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்தப் பெண் மயிலாடுதுறை ரயில்வே காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து ரயில்வே காவல் இன்ஸ்பெக்டர் சிவவடிவேல் டிக்கெட் பரிசோதகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். ஓடும் ரயிலில் பெண்ணிடம் தகாத முறையில் டிக்கெட் பரிசோதகர் நடந்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.