சவுதி அரேபியாவில் மதினா நகர் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள நபி மசூதியின் வெளிப்புற மண்டப பகுதியில் பாதுகாப்பு பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியில் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த பெண் ஒருவர் தடை செய்யப்பட்ட பகுதி வழியாக செல்ல முயற்சித்தார். அப்போது அவரிடம் வேறு வழியில் செல்லுமாறு பாதுகாப்பு அதிகாரி கூறியதால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது கோபமடைந்த அந்தப் பெண் திடீரென பாதுகாப்பு அதிகாரியை கன்னத்தில் அடித்தார். பதிலுக்கு அந்த அதிகாரியும் அந்தப் பெண்ணை 2 முறை அவரது கன்னத்தில் அடித்து விட்டார். இதை தொடர்ந்து அந்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இன்று பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் அந்த பெண்ணின் மீது அனைத்து விதமான சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

அதோடு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பணியில் அரசு முழுமையாக பொறுப்பேற்கும் என உறுதி அளித்துள்ளது. மேலும் அந்தப் பெண் பாதுகாப்பு அதிகாரியுடன் தகராறு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.