சீனாவின் ஷென்சென் நகர ரயில் நிலையத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.  அந்த வீடியோவில் 45 வயதுடைய ஒரு பெண், தனது நண்பர்கள் தாமதமாக வந்த காரணத்தால், அதிவேக புல்லட் ரயிலின் கதவை தன்னுடைய உடலால் தடுத்து நிறுத்தி, ரயிலின் பயணத்தை தாமதபடுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இரண்டு ரயில்வே ஊழியர்கள் அந்த பெண்ணை தடுக்க முயற்சித்தும், அந்த பெண்  கதவை பிடித்து  கொண்டு  தைரியத்துடன் கைபேசியில் பேசிக்கொண்டே, வெளியில் வேகமாக  வந்துகொண்டிருந்த தனது நண்பர்களை துரிதமாக வரச் சொல்லி  சைகைகள் காட்டினார். இந்த சம்பவத்திற்கு பின்  புல்லட் ரயில்  சீராக இயக்கப்பட்டு தாமதமின்றி சென்றது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, சீன போலீசார் அந்த பெண்ணை அடுத்த நாள் சியாமென் நகரில் கண்டுபிடித்து கைது செய்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவின் புகழ்பெற்ற அதிவேக ரயில்வே அமைப்பில் இது மாதிரியான குற்றங்களுக்கு  மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்  என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவ வீடியோ இணையத்தில் பரவியவுடன், பெரும்பாலான சமூக வலைதள பயனாளர்கள் பெண்ணின் தவறான செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும் சீனாவில் இந்த வகையான நடத்தை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது எனவும் தெரிவித்துள்ளனர்.