இணையவாசிகள் பலரும் சமூக வலைதள புகழுக்காக விலங்குகளை துன்புறுத்துவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் சமீபத்திய காலங்களில் வைரலாகி வருகிறது. இதேபோன்று அமெரிக்காவை சேர்ந்த சாம் ஜோன்ஸ் என்பவர் சமீபத்தில் வெளியிட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது. இவர் ஒரு இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுவென்சர். இவர் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது ஒரு சாலையின் ஓரத்தில் தாயுடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு குழந்தை வோம்பாட்டை அதன் தாயிடம் இருந்து பிரித்து எடுத்து கார் அருகே ஓடிவந்துள்ளார். இதனைப் பார்த்த தாய் வோம்பாட் அந்தப் பெண்ணின் பின்னாடியே துரத்திக் கொண்டு வருகிறது.

இதனை வீடியோவாக படம் பிடிக்கும் நபர்”அந்த குட்டியின் அம்மா அதன் பின்னால் ஓடி வருகிறது” என சிரித்துக் கொண்டே கூறுவது வீடியோவில் கேட்கிறது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோவிற்கு ஆஸ்திரேலியா வனத்துறை அதிகாரிகள், விலங்குகள் பாதுகாப்பு அமைப்பு மற்றும் உலகளாவிய விலங்கு ஆர்வலர்கள் கடுமையான கண்டனங்களையும், விமர்சனங்களையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ குறித்து ஆஸ்திரேலியா நாட்டின் அமைச்சர் டோனி பர்க், குடியரசு அதிகாரிகளின் கவனத்திற்கு அவர்களது விசாவை  ரத்து செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த வீடியோவை ஜோன்ஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கினார். மேலும் இது குறித்து ஜோன்ஸ் கூறியதாவது, “குழந்தை வோம்பாட் ஒரு நிமிடம் மட்டுமே தூக்கப்பட்டு பின்னர் அதன் தாயிடமே பாதுகாப்பாக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வோம்பாட்டை அரவணைக்கும் எனது கனவு நனவாகியது” என தெரிவித்திருந்தார்.