மகாராஷ்டிராவின் பல்கர் மாவட்டம் நாய்கான் பகுதியில் 28 வயது பெண்ணுக்கு வேலை வாய்ப்பு தருவதாகக் கூறி 4 பேர் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஆண்டு புனேவில் வேலை நேர்காணலுக்கு சென்றிருந்தார். ஆனால் நேர்காணலை தவறவிட்டதால், தனது உறவினரின் மூலம் அறிமுகமான பவன் சப்பாதை தொடர்பு கொண்டார். சப்பாத், வேலை வாங்கித் தருவதாக கூறி, அவரை புனேயிலிருந்து நாய்கான் கிழக்கு பகுதியில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்தார். அங்கு மற்ற மூன்று குற்றவாளிகளான தன்ராஜ் சாவான், நாகேஷ் கைகவாட், அபிஷேக் புஜாரி ஆகியோரும் இருந்தனர்.

இவ்வாறு அழைத்து வந்த பெண்மணியை குற்றவாளிகள் தொடர்ந்து 2 மாதங்களுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அவரின் ஆபாச புகைப்படங்களை எடுத்து, அவற்றை போலி இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்து, போலீசில் புகார் அளிக்காமல் தடுக்கும் வகையில் மிரட்டியுள்ளனர். இதே நேரத்தில், குற்றவாளிகள் பெண்மணியின் மொபைல் போனையும், ரூ.75,000 மதிப்புள்ள காதணிகளையும் பறித்து கொண்டதாக தெரியவந்துள்ளது. சம்பவம் டிசம்பர் 4, 2024 முதல் பிப்ரவரி 6, 2025 வரையிலான காலத்தில் நடந்துள்ளது. முதலில், அகோலா மாவட்டம் தாப்கி ரோடு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், பின்னர் அதை நாய்கான் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.

நாய்கான் காவல் நிலையத்தில் பணிபுரியும் மூத்த ஆய்வாளர் விஜய் கடம், “இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவரை பிப்ரவரி 18ஆம் தேதி கைது செய்துள்ளோம். மற்ற இருவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்” என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய கோரிக்கைகளும் எழுந்துள்ளன.