ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான பெண்கள் சவுதி அரேபியாவிற்கு வேலை வாய்ப்பு தேடிச் செல்கின்றனர். அதிக சம்பளம், சிறந்த வாழ்க்கை என வேலைக்காக அழைப்பவர்கள்  வாக்குறுதி கொடுக்கிறார்கள். ஆனால், New York Times வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இவை வெறும் பொய்யான வாக்குறுதிகளாகவே மாறியுள்ளது. அதன் படி சவுதி அரேபியாவிற்கு வேலைக்குச் செல்லும் பெண்கள் அடிமை நிலைக்கு தள்ளப்பட்டு பல்வேறு கொடுமைகளைச் சந்திக்கின்றனர். அதாவது கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 274 கென்ய பெண்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு இரட்டிப்பாக 55 ஆக உயர்ந்துள்ளது. அதிலும் முக்கியமானது, கென்யா மற்றும் உகாண்டா அரசுகள் நேரடியாகவே இதற்கு ஆதரவளிக்கின்றன என்பதே மிகப்பெரிய சோகமான உண்மை.

உகாண்டா அரசு தங்கள் பணியாளர்களின் நிலையை குறித்து எந்த தரவுகளையும் வெளியிட மறுக்கிறது. வேலை வாய்ப்புகளைத் தரும் நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் இணைந்து வேலைவாய்ப்பு சந்தையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, பெண்களின் வாழ்வை ஆபத்துக்குள் தள்ளி வருவதை New York Times குறிப்பிட்டுள்ளது. பல பெண்கள் வேலைக்குச் சென்று உயிரிழப்பதோடு, சிலர் கொடுமைப்படுத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கர்ப்பமாகி எந்த பணமும் இல்லாமல் திரும்ப அனுப்பப்படுகிறார்கள்.

இது போன்ற கீழ்மட்டச் சம்பளமும், எந்த உரிமையும் வழங்காத ஒப்பந்தங்களும்  பெண்களைச் சிக்கலில் சிறைபடுத்தியுள்ளது. 2012 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் அரசு சவுதி அரேபியாவுடன் ஒரு ஒப்பந்தம் செய்தபோது, குறைந்தது $400 மாத சம்பளம், வங்கி கணக்கு மற்றும் கடவுச்சீட்டுகளை பறிக்கக் கூடாது என்பன போன்ற நிபந்தனைகளை சேர்த்தது. ஆனால், ஆப்பிரிக்க நாடுகள் இவ்வாறு செயல்படாமல் மிகக் குறைந்த சம்பளத்தில் தங்கள் மக்களை அனுப்பிக் கொண்டிருக்கின்றன. 2021 இல் கென்யாவின் செனட் குழு சவுதி அரேபியாவில் வேலை செய்பவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளிக்கொண்டு வந்தது மற்றும் தொழிலாளர்களின் பணி அனுப்புதலை நிறுத்த பரிந்துரை செய்தது. இருந்தாலும், 2023 இல் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகியபோது கூட சம்பள உயர்வோ, வேலைவாய்ப்பு பாதுகாப்புக்கான எந்த புதிய விதிகளும் சேர்க்கப்படவில்லை. இதனால், ஆப்பிரிக்க பெண்களின் வாழ்க்கை இன்னும் மிகப்பெரிய அபாயத்தில் உள்ளதாக மனித உரிமைகள் குழுக்கள் எச்சரிக்கின்றன.