
உலக அளவில் மார்ச் மாதம் 8-ம் தேதி பெண்களின் பிரதிநிதித்துவத்தை போற்றும் வகையிலும் பெண்களின் மகத்துவத்தை கொண்டாடும் விதத்திலும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் தங்களுடைய சுய பாதுகாப்பு விஷயத்தில் எப்படி கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் ஏறக்குறைய அனைத்து பெண்களுமே வேலைக்கு செல்கிறார்கள். ஆண்களின் துணை இல்லாமல் பெண்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறார்கள். இது போன்ற சூழ்நிலையில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம்.
இரவு நேரத்தில் குறிப்பாக வாகனங்களில் தனியாக பயணம் செய்வதை பெண்கள் தவிர்க்க வேண்டும். வீட்டில் கார் ஓட்டுநர் மற்றும் வேலைக்கு ஆட்களை அமர்த்தும்போது அவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இதற்காக உங்கள் நேரத்தை வீணடிக்க முடியாது. எனவே காவல் நிலையத்தை அணுகி நீங்கள் வீட்டில் வேலைக்கு அமர்த்தும் நபர் மீது ஏதேனும் குற்ற வழக்குகள் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகு நீங்கள் வெளியே கிளம்பும்போது செல்போனில் முழு சார்ஜ் இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் நீங்கள் வீட்டிற்கு வருவதற்கு தாமதமானால் செல்போனில் சார்ஜ் முழுமையாக இருந்தால் தான் வீட்டிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க முடியும். ஒருவேளை திடீரென ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொண்டாலும் செல்போன்தான் உங்களுக்கு அந்த சமயத்தில் உதவும். எப்போதும் ஜிபிஎஸ் ஆன் செய்து வைத்திருப்பது மிகவும் நல்லது. நீங்கள் இரவு நேரத்தில் கேப் அல்லது டாக்ஸியில் தனியாக பயணம் செய்தால் அந்த வாகனத்தின் நம்பரை உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுக்கு அனுப்பி விடுவது மிகவும் நல்லது. வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும்போது கதவு மிகுந்த பாதுகாப்பான ஒரு விஷயம்.
எனவே வீட்டின் கதவு பலமானதாகவும் தரமானதாகவும் இருக்க வேண்டும். பெண்கள் வெளியே கிளம்பும்போது அது குறித்து உங்கள் குடும்ப உறுப்பினர்களிடம் கண்டிப்பாக தெரிவியுங்கள். அதோடு உங்கள் லொகேஷனையும் அவர்களுக்கு ஷேர் செய்து விட்டால் மிகவும் நல்லது. ஒருவேளை நீங்கள் ஆபத்தில் இருந்தால் உங்களுக்கு அவர்கள் உடனடியாக வந்து உதவி செய்வார்கள். மேலும் இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு பல இடங்களில் பாதுகாப்பற்ற சூழ்நிலை இருப்பதால் தங்களுடைய சுய பாதுகாப்பு விஷயங்களில் பெண்கள் மிகுந்த கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் இருப்பது அவசியமாகும்.