ஆந்திர மாநிலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாள்தோறும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்தக் கோவிலுக்கு வெவ்வேறு மாநிலங்களில் இருந்தும், வெவ்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் ஆந்திர மாநில அரசு “மன மித்ரா” என்ற பெயரில் வாட்ஸ் அப் சேவை வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இதன்படி திருப்பதி தேவஸ்தானங்கள் தொடர்பான தரிசன டிக்கெட் முன்பதிவு செய்தல், அறைகள், மற்றும் நன்கொடை வழங்குதல் போன்ற சேவைகளை வாட்ஸ் அப் மூலமாகவே விரைவில் வழங்க உள்ளது.

இந்த திட்டம் பக்தர்களுக்கு மிகவும் எளிய முறையில் பயன்படுத்த வசதியாக இருக்கும். அரசு whatsapp-ல் சேவைகளைப் பெற அரசாங்க whatsapp எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பியதும் சேவைகள் தொடர்பான தகவல்கள் வழங்கப்படும். அதன் பின்னர் டிக்கெட்டுகள் தொடர்பான விவரங்கள், முன்பதிவு செய்வதற்கான விவரங்களை பூர்த்தி செய்து அரசாங்க வாட்ஸ் அப் எண்ணுக்கு டிஜிட்டல் கேஷ் பேமெண்ட் மூலம் பணத்தை செலுத்தி தங்களது தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ள முடியும். இது குறித்து ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது, மத்திய அரசின் அனுமதியுடன் இந்த சேவைகள் முழுவதுமாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.