
ஜெர்மனியில் அரிய வகைச் சம்பவமாக கொலை விசாரணை ஒன்று ஆச்சரியமாக முடிவடைந்துள்ளது. ராஸ்டாக் நகரில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில், ஒரு நபர் தனது நாயுடன் நடக்கும்போது ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதை பார்த்துள்ளார். இந்த தகவலைப் பெற்றதும் போலீசார், நீதிமன்ற மருத்துவர், தடய அறிவியல் நிபுணர்கள் என பலர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
தரையில் கிடந்த உடலை புகைப்படம் எடுத்து, அளவுகளுடன் பரிசோதித்து, கூடுதலாக ட்ரோன்கள் மற்றும் 3D ஸ்கேனர்களும் பயன்படுத்தப்பட்டன. கூடவே, அந்த பகுதி முழுவதும் காவல்துறை அதிகாரிகளால் சுற்றிவளைக்கப்பட்டு, அந்த சடலத்தின் உண்மையை வெளிக் கொண்டு வர பல மணி நேரம் கடுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
சுமார் 5 மணி நேரத்திற்குப் பிறகு, விசாரணை அதிகாரிகளில் ஒருவர் அந்த உடலை தொட்ட போது அதிர்ச்சி அளிக்கும் உண்மை வெளிவந்தது. அது மனித உடல் அல்ல, உண்மையான உடலை போலவே வடிவமைக்கப்பட்ட ஒரு பாலியல் பொம்மை என்பது தான். மேலும், அந்த டாலின் சில பகுதிகள் எரிக்கப்பட்டு பின்னர் ப்ளாஸ்டிக் பை ஒன்றில் போடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து போலீசார், இது தங்கள் பணியின் வரலாற்றில் நடந்த மிகவும் விசித்திரமான சம்பவம் என்று தெரிவித்தனர். இது போன்றதொரு சம்பவம் 2022ஆம் ஆண்டு தாய்லாந்திலும் நடந்துள்ளது. அப்போது கடற்கரையில் ஒருவரின் சடலமாக நினைக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியதன் பிறகு ஜப்பானில் தயாரிக்கப்பட்ட பாலியல் பொம்மை என உறுதி செய்யப்பட்டது.