பிரபல ஐடி நிறுவனம் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி சமீபத்தில் இளைஞர்கள் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை உழைக்க வேண்டும் எனக் கூறியது மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானது. ஊழியர்கள் ஒரு வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற கருத்தை தொடர்ந்து நாராயணமூர்த்தி வலியுறுத்தி வருகிறார். இதற்கு பலரும் நிறுவனத்தின் லாபம் ஈட்டுவதற்கு நாராயணமூர்த்தி இவ்வாறு கூறுகிறார் என விமர்சனங்களை தெரிவித்துக் வருகின்றனர்.

இந்த விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும் விதமாக இந்திய வர்த்தக சபை நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாராயணமூர்த்தி கூறியதாவது, இந்தியாவில் நியாய விலை கடைகளில் சுமார் 800 மில்லியன் மக்கள் இன்று வரையிலும் அரிசி பெறுகிறார்கள். அப்படியானால் இன்றும் இந்தியாவில் வறுமைக்கோட்டில் உள்ளவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதே அர்த்தமாகும்.

எனவே இந்தியாவை முன்னேற்றக் பாதைக்கு கொண்டு செல்ல இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கான பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. இதனை வலியுறுத்தியே நான் எனது கருத்துக்களை தெரிவித்தேன். இந்திய நாடு இரக்கமுள்ள முதலாளித்துவத்தை கொண்டு தான் செயல்படுகிறது எனவும் தெரிவித்தார்.