
சென்னை மாவட்டத்தில் உள்ள முகப்பேர், புழல், பெரவள்ளூர் பகுதிகளில் தனியாக இருக்கும் சிறுமிகளிடம் முகவரி கேட்பது போல நடித்து ஒரு வாலிபர் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விடுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
இதனையடுத்து கேமராவில் பதிவான வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து சரவணன்(31) என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் டிரைவரான சரவணன் மேடை கச்சேரிகளில் பாட்டு பாடி வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு சிறுமிகளிடம் சில்மிஷம் செய்ததற்காக ஏற்கனவே திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் சரவணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து ஜாமீனில் வெளியே வந்த சரவணன் மீண்டும் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தது விசாரணையில் தெரியவந்தது. அவரை மீண்டும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். முன்னதாக போலீசார் பிடிக்க முயன்ற போது தப்பி ஓடியதால் சரவணன் கீழே விழுந்தார். அவரது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் அவரது கையில் மாவு கட்டு போடப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.