
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள முத்து முடி 2-வது டிவிஷனில் கௌதமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குறிஞ்சி மலர் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த குறிஞ்சி மலரை வால்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து அரசு மருத்துவமனை டாக்டர் மற்றும் செவிலியர்கள் குறிஞ்சி மலருக்கு தையல் போட்டு சிகிச்சை அளித்துள்ளனர்.
அப்போது மின்தடை ஏற்பட்டதாக தெரிகிறது. இதனையடுத்து அங்கிருந்த பணியாளர்கள் ஜெனரேட்டரை போடுவதற்காக சென்றபோது மின்சாரம் வந்தது. இதற்கிடையே ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதாக கூறி குறிஞ்சி மலரை ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் குறிஞ்சி மலர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்த குறிஞ்சி மலரின் உறவினர்கள் முறையான சிகிச்சை அளிக்காததால் தான் இளம்பெண் உயிரிழந்ததாக குற்றம் சாட்டி பொள்ளாச்சி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.