
தாய்லாந்தில் உள்ள பட்டாயா பீச்சில் கடந்த 21ம் தேதி அன்று 2 பெண்கள் கடற்கரையில் அமர்ந்துள்ளனர். அப்போது அங்கு வந்த 2 இந்திய சுற்றுலா பயணிகள் அப்பெண்களை தொந்தரவு செய்துள்ளனர். அவர்களில் ஒருவர் பெண்களின் அனுமதியின்றி வீடியோ எடுத்துள்ளார். அதனை நீக்குமாறு அப்பெண்கள் கேட்டபோது, அந்த சுற்றுலா பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அது கைகலப்பாக மாறியது. உடனே அருகில் இருந்த டாக்ஸி டிரைவர் ஒருவர் இந்த தகராறை தடுக்க முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை.
இதையடுத்து அவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி விரைந்து வந்த காவல் துறையினர் தகராறை நிறுத்தி அவர்களிடம் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மேற்கண்ட விபரங்கள் தெரிய வந்தது. இந்த மோதலில் 2 தாய் பெண்கள், 2 இந்தியர்கள் மற்றும் உதவிக்கு சென்ற மோட்டார் டாக்ஸி ஓட்டுனர் உட்பட 5 பேர் காயமடைந்தனர். டாக்ஸி ஓட்டுநருக்கு கால் முறிவு மற்றும் கண் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.