சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூரில் 33 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் தியாகராய நகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்க்கும் புதுப்பேட்டையை சேர்ந்த அரவிந்த்சாமி என்பவரிடம் நட்பாக பழகி வந்துள்ளார். இந்நிலையில் அலுவலகம் தொடர்பான தேர்வுக்கு செல்வதற்கு முன்பாக இளம்பெண் தனது செல்போனை அரவிந்த்சாமியிடம் கொடுத்து விட்டு சென்றதாக தெரிகிறது. அப்போது தனக்கு இருக்கும் தோல் வியாதி தொடர்பாக டாக்டரிடம் காண்பிப்பதற்காக தனது உடலை இளம்பெண் படம் பிடித்து வைத்துள்ளார். அந்த புகைப்படங்களை அரவிந்த்சாமி தனது செல்போனுக்கு அனுப்பி கொண்டார்.
இதனை தொடர்ந்து அங்கிருந்து வேலையை விட்டு நின்ற அரவிந்த்சாமி கரூர் டவுன் காவல் நிலையத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களாக அரவிந்த்சாமி இளம்பெண்ணின் செல்போனுக்கு அவரது அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி உல்லாசத்திற்கு வருமாறு அழைத்து தொந்தரவு கொடுத்துள்ளார். மேலும் 2 லட்சம் ரூபாய் தரவில்லை என்றால் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் எனக் கூறி மிரட்டியுள்ளார். இது தொடர்பாக அந்த இளம்பெண் திருவெற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அரவிந்த்சாமியை கைது செய்தனர்.