இன்றைய காலகட்டத்தில் சில இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பிரபலமாவதற்கு பல்வேறு அட்டகாசங்களை செய்து வீடியோவாக இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர். அவ்வாறு வெளியாகும் வீடியோக்கள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் லக்னோ நகரின் கோம்டிநகர் பகுதியில் சில இளைஞர்கள் கார்களுடன் ஆபத்தான ஸ்டண்ட் செய்து வீடியோவாக இணையதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோக்கள் “லக்னோ …. இந்த மரண ஸ்டண்ட் மற்றும் போக்கிரித்தனம்….தொடர் வழக்கம் போல் தொடர்கிறது… ஏ சி பி யின் ஒரே மகன் விபத்தில் உயிரிழந்த அதே பகுதி கோம்டிநகர்” என்னும் தலைப்பில் தினேஷ் திரிவாதி என்ற பயனர் வெளியிட்டுள்ளார். அதில் முதல் வீடியோவில் தார் காரின் மேற்கூறையில் இளைஞர்கள் நின்று கொண்டிருப்பது காணப்படுகிறது.

2வது வீடியோவில் ஒரு வெள்ளை நிற கார் சாலையில் வேகமாக செல்வதும், இளைஞர் ஒருவர் ஜன்னல் வெளியே தொங்குவதும், காரின் மேற்பகுதி வழியாக 2 பேர் கை அசைப்பதும் காணப்படுகிறது. 3வது வீடியோவில் ஒரு மஹீந்திரா தார் கார் சாலையில் 2 சக்கரங்களை தரையில் இருந்து மேலே எழுப்பி சறுக்கலில் ஈடுபட்ட போது கார் கவிழ்ந்து விடும் அளவுக்கு காரை இயக்கிய சம்பவம் காணப்படுகிறது.

இதை தொடர்ந்து இந்த 3 வீடியோக்களும் இணையத்தில் வைரலான நிலையில் லக்னோ காவல் துறை இது தொடர்பாக பதில் அளித்துள்ளது.

அதில் “இந்த விஷயம் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது” என்றும், “இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் சிசிடிவி மூலம் அடையாளம் காணப்பட்டு அவர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இளைஞர்கள் சாலைகளில் உயிருக்கு ஆபத்தான வகையில் இதுபோன்ற ஸ்டண்ட் செயல்களில் ஈடுபடுவது சமுதாயத்தில் மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது.