சென்னை கானத்தூர் பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது குழந்தை மற்றும் உறவினருடன் கடந்த 25ம் தேதி அன்று ஈ.சி.ஆர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் பக்கிங்காம் கால்வாய் கடலில் கலக்கும் காட்சியை பார்ப்பதற்காக காரை நிறுத்தியுள்ளனர். அங்கு திமுக கட்சி கொடி பொருந்திய காரில் சில வாலிபர்கள் வந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு உள்ளனர். இருப்பினும் அந்த வாலிபர்கள் பெண்கள் சென்ற காரை துரத்தி வந்துள்ளனர். இதனால் பதறிய பெண்கள் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அதோடு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இருப்பினும் அந்த வாலிபர்கள் சாலையில் காரை குறுக்கே நிறுத்திவிட்டு மீண்டும் பெண்கள் சென்ற காரை மடக்கியுள்ளனர். அது மட்டுமின்றி 4 வாலிபர்களில் ஒருவர் காரை விட்டு கீழே இறங்கி வந்து பெண்களை மிரட்டி உள்ளார். காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக அந்த பெண்கள் தெரிவித்த பின் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். காரில் துரத்தி வந்த இளைஞர்கள் தங்கள் காரை அந்தப் பெண்கள் இடித்து விட்டதாக கூறினார். ஆனால் இதனை பெண்கள் மறுத்துள்ளனர். காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது. ஆனால் காவல் ஆய்வாளர் ஒப்புகை சீட்டை மட்டும் வாங்கிவிட்டு வழக்கு பதிவு செய்யாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் இது தொடர்பான வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இதற்கு இடையே புகார் அளித்த பெண்ணின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் காவல்துறை தமிழில் வெளியிட்ட பத்திரிக்கை செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதோடு புகார் அளித்த பெண்ணின் பெயரை எப்படி வெளியிடலாம் என்று சமூக ஊடகங்களில் கேள்விகளும் கேட்கப்பட்டது. இதையடுத்து அந்தப் பெண்ணின் பெயர் மற்றும் விவரங்கள் அனைத்தும் நீக்கப்பட்டன.