மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத் பகுதியில் வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இந்த வன்முறைக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துகிறது. அதாவது மம்தா பானர்ஜி அரசு இந்த வன்முறையை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக பாஜக கடுமையாக சாடும் நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்டத்திருத்ததால் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டது என மம்தா பானர்ஜி அரசு குற்றம் சாட்டுகிறது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் வர இருப்பதால் அதுவரையில் ஜனாதிபதி ஆட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதி பி‌ஆர் கவாய் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி நாங்கள் இந்த மனுவுக்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா.? தற்போதுள்ள நிலையில் ஏற்கனவே நீதித்துறை தான் அத்துமீறுகிறது என்ற குற்றச்சாட்டினை நாங்கள் எதிர்கொள்கிறோம் என்றார். அதாவது தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்ததால் அந்த தீர்ப்பை பாஜக எம்பிக்கள் மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோர் கடுமையாக விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனை மனதில் வைத்துக்கொண்டு தான் தற்போது பி.ஆர் கவாய் இப்படி கூறியுள்ளார்.