ஐ.பி.எல். 2025 தொடரின் 43-வது லீக் ஆட்டம் நேற்று (ஏப்ரல் 25) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி 19.5 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அணியின் சார்பில் டிவால்ட் பிரெவிஸ் 42 ரன்கள் அடித்து சிறப்பித்தார். ஐதராபாத் அணியில் ஹர்ஷல் படேல் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் 155 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இஷான் கிஷன் 44 ரன்கள் விளாசினார். சென்னை அணிக்காக நூர் அகமது 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

முக்கியமாக, ஐதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல், பந்துவீச்சில் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக ‘ஆட்டநாயகன்’ விருதை வென்றார்.

இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக 20 வயதுடைய ஷேக் ரசீத் மற்றும் 17 வயதுடைய ஆயுஷ் மாத்ரே ஆகிய இளம் வீரர்கள் களமிறங்கினர். ஐ.பி.எல். வரலாற்றில் 21 வயதிற்குள் உள்ள இருவர் ஒரு போட்டியில் தொடக்க வீரர்களாக  இது 4-வது முறை. இதற்குமுன்பு சஞ்சு சாம்சன் – ரிஷப் பண்ட், சுப்மன் கில் – டாம் பாண்டன், அபிஷேக் சர்மா – பிரியம் கார்க்,ஆகியோர் இந்த சாதனையை செய்துள்ளனர். இச்சாதனையுடன், ஷேக் ரசீத் மற்றும் ஆயுஷ் மாத்ரே ஆகியோர் இச்சிறப்புப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.