சென்னை மாவட்டம் ஆவடி பகுதியை சேர்ந்த ஜெய பிரகாஷ்(31) என்பவர் வில்லிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய திருமண வரனுக்காக ஆன்லைனில் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் சென்னை அமைந்தகரையை சேர்ந்த பிரபு என்பவரின் மகளை ஜெயபிரகாஷுக்கு பிடித்திருந்ததால் பிரபுவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதன் பின்னர் பிரபு ஜெயபிரகாசுக்கு தனது மகளை திருமணம் செய்து தருவேன் என உறுதி அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து பிரபு ஜெயபிரகாஷிடம் இருந்து அடிக்கடி பணம் வாங்கியுள்ளார். மேலும் புதிய வீட்டிற்கு குடியேறுவதாக கூறி பணம் வாங்கியுள்ளார்.

ஆனால் பணத்தை வாங்கிக் கொண்ட பிரபு தன் மகளை திருமணம் செய்து தர முடியாது என கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஜெயப்பிரகாஷ் தான் கொடுத்த 17 லட்ச ரூபாய்  பணத்தை திருப்பித் தருமாறு பிரபுவிடம் கேட்டுள்ளார்.

ஆனால் பிரபு பணத்தை திருப்பி தர முடியாது உன்னால் முடிந்ததை செய் என சொன்னதால் இது குறித்து ஜெயபிரகாஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர். மேலும் பிரபுவின் குடும்பத்தினர் தலைமறைவானதால் அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.