தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் முதல் மாநாட்டின் போது இரு மொழிக் கொள்கைதான் எங்கள் கொள்கை என்று கூறினார். அதோடு திராவிடம் மற்றும் தேசியம் இரண்டும் தமிழக வெற்றிக் கழகத்தின் இரு கண்கள் என்று கூறினார். திராவிடத்தை பின்பற்றுவதாக கூறிய விஜய் அதே சமயத்தில் திமுக தான் தங்களுடைய முதல் எதிரி என்றும் அறிவித்தார். கிட்டத்தட்ட திமுகவின் கொள்கைகளை தமிழக வெற்றி கழகமும் பின்பற்றுவதாக பலரும் கூறுகிறார்கள்.

நடிகர் விஜய் கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று தெரிவித்துள்ளார். இவருடைய கருத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் ஆதரவு கொடுத்தும் பலர் விமர்சனங்களை தெரிவித்தும் வருகிறார்கள். இந்நிலையில் தற்போது லண்டனில் இருக்கும் தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நடிகர் விஜய் இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவதாக கூறியதற்கு தற்போது மறைமுகமாக விமர்சனங்களை தெரிவித்துள்ளார்.

அதாவது நடிகர் விஜய் இரு மொழி கொள்கைகளை மட்டும் தான் பின்பற்றுவதாக அறிவித்த நிலையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழி பின்பற்றப்படும் என்றார். இது தொடர்பாக லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசினார். அவர் பேசியதாவது, புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்களும் இரு மொழி கொள்கைதான் என்று கூறுகிறார்கள். 60 ஆண்டுகளாக இருக்கும் கட்சியும் அதைத்தான் சொல்கிறது. மூன்றாவது மொழி கற்க வாய்ப்பை ஏற்படுத்தி தரமாட்டோம் என்று கூறுவது அகங்காரம்.

காமராஜர் போன்று யாராலும் நிச்சயம் தமிழகத்தை இனி ஆள முடியாது. அதேபோல என்.டி ராமராவ் போன்ற புகழ்மிக்க அரசியல்வாதியாகவும் ஒருவரால் உருவாக முடியாது. புதிதாக வருபவர்கள் மற்றும் என்னைப் போன்றவர்கள் சின்ன சின்ன மாற்றங்களை ஏற்படுத்துவோம். படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். மோடி போன்ற தலைவர்களும் இனி கிடைக்க மாட்டார்கள் என்று கூறினார். மேலும் புதிதாக வந்தவர்கள் மற்றும் ஏற்கனவே ஆட்சி இருபவர்கள் என இருவரும் இருமொழிக் கொள்கையை பின்பற்றுவதாக அண்ணாமலை கூறியுள்ளார்.