மேற்கு வங்காள மாநிலத்தில் வசிக்கும் 11 பேர் விவசாய வேலைக்காக சென்னையை அடுத்த பொன்னேரிக்கு வந்துள்ளனர். அங்கு 3 நாட்கள் வேலை செய்த பிறகு, வேறு வேலை இல்லை என்பதால் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்தனர். அதன்படி கடந்த 13ம் தேதி அன்று சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். இதையடுத்து உணவின்றி 3 நாட்கள் ரயில் நிலையத்தில் தங்கியுள்ளனர். பட்டினியின் காரணமாக 5 பேர் மயங்கி விழுந்துள்ளனர். இதனைப்  பார்த்த ரயில்வே காவல்துறையினர் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அதன் பின் விசாரணை நடத்தியதில், அவர்கள் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த மிட்னாபூர் பகுதியைச் சேர்ந்த சமர்கான் , மாணிக் கோரி , சத்யா பண்டிட் , ஆசித் பண்டிட், கோனாஸ் ஸ்மித் என்பது தெரியவந்தது. இவர்களில் 4 பேர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன நிலையில், சிகிச்சை பெற்று வந்த சமர்கான் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவருக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க சில சமூக செயற்பாட்டாளர்கள் உதவி செய்தனர். அதோடு இவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் விமானம் மூலம் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல 60,000 ரூபாய் வழங்கினார்.