
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள “ஸ்டில் க்ரீக் கிரிஸ்தவ அகாடமி” பள்ளியில் இடம்பெற்ற சில சம்பவங்கள் தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளன. பள்ளி வளாகத்திலேயே தங்கவைக்கப்படும் குழந்தைகள் கல்வி பெறும் இந்த அகாடமியில், முன்னாள் ஆசிரியை புரூக் மார்டினஸ் (30) ஒருவர், 2024 ஆம் ஆண்டு 18 வயது மாணவருடன் தகாத உறவு வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பள்ளி ஊழியரால் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏப்ரல் 10ஆம் தேதி புரூக் மார்டினஸ் கைது செய்யப்பட்டதாக ப்ராஸோஸ் கவுண்டி ஷெரிஃப் துறை தெரிவித்துள்ளது.
இதற்குமுன்னர், புரூக் மார்டினஸின் தந்தை ஜான் எட்வர்ட் மார்டினஸ் (57) என்பவர், அதே பள்ளியில் ‘ஹவுஸ் பேரண்ட்’ (மாணவர்களுடன் வாழும் வளாகத் தலைவர்) ஆக பணியாற்றியவர், பள்ளி வளாகத்தில் சிறுமிகளிடம் தவறான நெருக்கம் காட்டியதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் சிறுமிகளை தனியார் அறைக்குள் அழைத்துச் சென்று வாசல் பூட்டப்பட்ட நிலையில் தவறான செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், “இது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் இந்த முகாமிலிருந்து நீக்கப்பட்டுவிடுவீர்கள்” என மாணவர்களை மிரட்டியதாகவும் வழக்குப் பதிவாகியுள்ளது.
புரூக் மார்டினஸின் கைது குறித்து ஸ்டில் க்ரீக் அகாடமி வெளியிட்ட அறிக்கையில், “இந்த குற்றச்சாட்டு எங்கள் பள்ளியின் தரநிலைக்கு எதிரானது. மாணவர்களுக்கு பாதுகாப்பான, அன்பான சூழல் வழங்கவேண்டும் என்பது எங்கள் முதன்மை நோக்கம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் வெளியாகியவுடன், பள்ளி நிர்வாகம் ப்ராஸோஸ் காவல் துறைக்கும், குடும்ப மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் துறைக்கும் புகாரளித்ததாகவும், தொடர்ந்து ஒத்துழைக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், “இவர் பணியில் சேரும் முன் முழுமையான பின்னணி சரிபார்ப்பு செய்யப்பட்டிருந்தது. தற்போது வழக்குத் தொடர்பாக கூடுதல் விவரங்களை வெளியிட முடியாத நிலை உள்ளது” எனவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.