
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் மிகவும் வெற்றிகரமான சமூக ஊடகமாக டுவிட்டர் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தை உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் அண்மையில் வாங்கினார். அப்போது இருந்தே டுவிட்டரில் பல அதிரடி திருப்பங்கள் நேர்ந்துள்ளது. எலான் மஸ்கின் இந்த அதிரடி நடவடிக்கையால் பலர் டுவிட்டரில் இருந்தே வெளியேறும் முடிவை எடுத்தனர். இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் டுவிட்டர் வீடியோக்களை ஸ்மார்ட் டிவிகளில் பார்க்க ஏதுவான செயலி ஒன்றை அறிமுகம் செய்ய இருக்கிறது Twitter நிறுவனம். இத்தகவலை எலான் மஸ்க் தன் டுவிட்டர் பதிவு வாயிலாக உறுதிப்படுத்தி உள்ளார்.
டுவிட்டரில் 2 மணிநேரம் ஓட கூடிய வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் வசதியையும் டுவிட்டர் நிறுவனம் புதியதாக அறிமுகப்படுத்த இருக்கிறது. வெரிஃபைட் கணக்குகளை கொண்டிருக்கும் பயனர்களுக்கு மட்டும்தான் இந்த சலுகையானது வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஆகவே டுவிட்டருக்கான வீடியோ செயலி அறிமுகம் செய்யப்பட்டால் அது யூடியூப் செயலிக்கு கடும் போட்டியாக அமையும் என தெரிகிறது. அதோடு யூடியூபை போன்றே டுவிட்டரில் கண்டண்ட் கிரியேட்டர்களுக்கு விளம்பரங்கள் வாயிலாக வருவாய் ஈட்ட வசதி ஏற்படுத்தப்படும் என்று டுவிட்டர் நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.