
ஆந்திர மாநிலம் ஸ்ரீசத்ய சாய் மாவட்டம் பெனுகொண்டாவில் செயல்பட்டு வரும் தென்கொரியாவைச் சேர்ந்த பிரபல கியா கார் நிறுவனத்தின் தொழிற்சாலையில், சுமார் ₹23.75 கோடி மதிப்புள்ள 940 இன்ஜின்கள் காணாமல் போன அதிர்ச்சிகரமான சம்பவம் வெளியாகியுள்ளது.
2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலையில், இந்தியா மட்டுமின்றி பல நாடுகளுக்கும் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் வருடாந்திர கணக்கெடுப்பு செய்யப்பட்டபோது இந்த இன்ஜின் திருட்டு சம்பவம் நிறுவனம் சார்பில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து, நிறுவனம் சார்பில் பெனுகொண்டா தொழில்துறை காவல் நிலையத்தில் கடந்த மாதம் 19-ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து, ஒரு சிறப்பு விசாரணை குழுவை அமைத்தனர்.
தொழிற்சாலை நிர்வாகம் சந்தேகப்படும் நபர்களின் நடமாட்டத்தை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்காணித்ததில், பதான் சலீம் என்ற ஊழியர் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி தனது பணியிடம் தவிர வேறு இடத்திற்கு இன்ஜின்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றது பதிவாகியிருந்தது.
இந்த ஆதாரங்களை வைத்து பதான் சலீமை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சதித்திட்டமிட்டு இந்த திருட்டு செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளதால், மற்றொரு குழுவும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
ஒவ்வொரு இன்ஜினும் சுமார் ₹2.5 லட்சம் மதிப்புடையதாக இருப்பதால், மொத்தம் ₹23.75 கோடி இழப்புக்கு சமமான இந்த திருட்டு விவகாரம் தொழிற்சாலை நிர்வாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி, பாதுகாப்பு முறைகள் மீதான கவனத்தை மீண்டும் அதிகரிக்க வைத்துள்ளது.