
பட்டுக்கோட்டை அருகே பேராவூரணி அடுத்த மருங்கப்பள்ளம் கிராமத்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியை சேர்ந்த தேவசேனன் (66) என்பவர், தனது மனைவி பூங்கோதை உடன் கடந்த மார்ச் 22-ஆம் தேதி கடலூரில் உள்ள மருமகள் அஸ்வினியை பார்க்க சென்றிருந்தார். அவரது மகன் அஸ்வின் சண்முகப்பிரியன் லண்டனில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வருகிறார். வீட்டில் யாரும் இல்லாததை கவனித்த கொள்ளையர்கள், பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, இரு இரும்பு லாக்கர்களை தூக்கிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் 24-ம் தேதி காலை, வீட்டு வேலைக்காக வந்த ஜோதி என்பவரால் தெரியவந்தது. அவர் உடனடியாக தேவசேனனுக்கு தகவல் தெரிவிக்க, அவரது உறவினர் காந்தி வந்து பார்த்தபோது இரு லாக்கர்களும் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் கடலூரில் இருந்த தேவசேனன் திரும்பி வந்து சேதுபாவாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் மரப்பீரோக்கள் திறக்கப்பட்டிருந்ததோடு, அதில் ஏதும் இல்லாததால் கொள்ளையர்கள் இரும்பு லாக்கர்களையே தூக்கிச் சென்றதாக கண்டுபிடிக்கப்பட்டது.
திருடப்பட்ட இரு லாக்கர்களில் தங்க நகைகள் 12 சவரன் மற்றும் வெள்ளி பொருட்கள் 12 கிலோ இருந்ததாக கூறப்படுகிறது. ஒவ்வொரு லாக்கரும் 250 கிலோ எடை கொண்டதாம். இதனை 80 அடி தூரம் இழுத்துச் சென்று, முள்வேலியை வெட்டியும் வாகனத்தில் ஏற்றி எடுத்துச் சென்றுள்ளனர். இது குறைந்தது 6 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலின் செயல் என போலீசார் நம்புகின்றனர். கடந்த ஆண்டு முதல் இதே பகுதியில் 6 வீடுகளில் இத்தகைய கொள்ளை சம்பவங்கள் நடந்து வருவதால், கிராம மக்கள் பீதியில் உள்ளனர். இதுவரை எந்தக் குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.