ராமேஸ்வரம் வெண்மணி நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனது நெருங்கிய நண்பரான ராஜாவுடன் வீட்டிற்கு அருகில் அமர்ந்து மது குடிப்பது வழக்கம். சம்பவம் நடந்த அன்று மது குடிப்பதற்காக ராஜா வெங்கடேசனின் வீட்டிற்கு வந்துள்ளார்.

அந்த சமயம் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த ராஜா வெங்கடேசனின் தங்கையிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனையடுத்து வீட்டிற்கு வந்த வெங்கடேசனிடம் அவரது தங்கை நடந்தவற்றை கூறி அழுதார்.

இதனை கேட்டு ஆத்திரமடைந்த வெங்கடேசன் ராஜாவை கொடூரமாக கொலை செய்து தனது வீட்டிற்கு அருகிலேயே குழி தோண்டி புதைத்து அதன் மீது தேவையற்ற பொருட்களை போட்டு மறைத்து விட்டார்.

இதற்கிடையே வெளியே சென்ற ராஜா வீட்டிற்கு திரும்பி வராததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வெங்கடேசனை பிடித்து விசாரித்த போது அவர் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

பின்னர் காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ராஜாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.