சென்னை மாவட்டம் நங்கநல்லூர் தில்லை கங்கா நகரை சேர்ந்தவர் முரளிதரன்(65). இவர் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ரோகிணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரசன்னா வெங்கடேசன்(30), ஆதித்ய நாராயணன்(28) என்ற மகன்கள் உள்ளனர். ஆதித்ய நாராயணன் பொறியியல் பட்டப்படிப்பில் தங்க பதக்கம் வாங்கியுள்ளார். அவருக்கு சற்று மனநல பாதிப்பு இருந்ததாக தெரிகிறது. வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த ஆதித்ய நாராயணன் முரளிதரனிடம் அடிக்கடி பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தந்தை மகனுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டபோது கோபத்தில் ஆதித்ய நாராயணன் கத்திரிக்கோலால் தனது தந்தையின் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதனால் படுகாயமடைந்த முரளிதரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு தனது தாய் ரோகிணியை அழைத்துக் கொண்டு உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கறிஞரை பார்ப்பதற்காக ஆட்டோவில் சென்றார்.

பின்னர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது தனது அண்ணனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தந்தையை கொலை செய்துவிட்டேன். நீ சென்று பார்த்து இறுதி சடங்கை முடித்து விடு என கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு ஓட்டி சென்றார். அதன் பிறகு போலீசார் நடத்திய விசாரணையில் ஆதித்யநாராயணன் முரளிதரனை கொலை செய்தது உறுதியானது. அவரை போலீசார் கைது செய்தனர். சரியான நேரத்தில் சுதாரித்து செயல்பட்டு ஆட்டோ ஓட்டுநரை போலீசார் பாராட்டியுள்ளனர்.