
கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக நிறுவனர் அன்புமணி ராமதாஸ், திமுக அரசு ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் இருப்பது கோழைத்தனம் என்று கும்பகோணத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க சோழமண்டல சமய சமுதாய நல்லிணக்க மாநாட்டில் பேசினேன். இதற்கு பாமக வழக்குக்கு பயந்து மத்திய அரசிடம் மண்டி இடுவது தான் கோழைத்தனம் என்று அமைச்சர் சேகர்பாபு பேசி இருந்தார். ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு திமுக அரசு தான் கோழைத்தனமாக செயல்படுகின்றது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழக அரசும் அதே சட்டப்பிரிவின்படி ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் உண்டு. இந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு முழு அதிகாரம் இருந்தும் இல்லை என்று கூறுவது தான் கோழைத்தனமாக உள்ளது. பாமக வழக்குக்கும் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. மற்ற மாநிலங்களுக்கு இருக்கின்ற அதிகாரம் தமிழக அரசிற்கு ஏன் இல்லை? அதிகாரம் இல்லை என்றாலும் கூட ஆட்சியில் இருப்பவர்கள் ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும். அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது என பொய் கூறுவது தான் கோழைத்தனம் என்று அன்புமணி காட்டமாக பேசி உள்ளார்.