
மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் அழகர்சாமி 9-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அழகர்சாமி வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்து தூங்கினார். நேற்று முன்தினம் அதிகாலை 3 மணிக்கு 8 பேர் கொண்ட மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அழகர்சாமியின் வீட்டிற்கு சென்று கதவை தட்டி வேலைக்கு வா போகலாம் என கூறி அழைத்தனர். இதனால் தன்னை அழைப்பவர்கள் யார் என்று பார்ப்பதற்காக அழகர்சாமி வெளியே வந்தார்.
அப்போது மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அழகர்சாமியின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அதாவது கொலை நடந்ததற்கு முந்தைய நாள் இரவு அழகர்சாமி சிலருடன் சேர்ந்து மது குடித்துள்ளார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அந்த பிரச்சனையை மனதில் வைத்து கொண்டு பழிவாங்குவதற்காக அழகர்சாமியை மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.