
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அக்களூர் கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஜான்சி ராணி (37) என்ற மனைவியும் 13 வயதில் யோகஸ்ரீ என்ற மகளும், 9 வயதில் யோகேஷ் என்ற மகனும் இருக்கிறார்கள். இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பாக புதிதாக வீடு கட்டி குடிபெயர்ந்த நிலையில் ஜான்சிராணி நேற்று அதிகாலை நேரத்தில் தூங்கி எழுந்த பிறகு வீட்டு வாசலுக்கு வந்தார். அப்போது அவருடைய வீட்டின் அருகே ஒரு மின் கம்பி அறுந்து தொங்கியது.
அதிகாலை 5 மணி என்பதால் மின்கம்பி அறுந்து தொங்கியதை அவர் கவனிக்கவில்லை. அப்போது அந்த மின்கம்பி எதிர்பாராத விதமாக அவருடைய கழுத்தில் உரசியது. இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இது தொடர்பான தகவலின் பெயரில் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மின்சார இணைப்பை துண்டித்தனர். மேலும் காவல்துறையினர் ஜான்சி ராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.